கிருஷ்ணகிரி, நவ.5: பர்கூர் அடுத்த கிறிஸ்துவப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பர்கூர் அடுத்த ஒப்பதவாடி பஞ்சாயத்து கிறிஸ்துவபட்டியில், 45 குடும்பங்களை சேர்ந்த ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் வசித்து வருகிறோம். கடந்த 1998ல் எங்கள் கிராமத்தினர் சென்று வர, அப்போதைய ஊர் தலைவர், கிறிஸ்துவப்பட்டி செல்லும் ஆற்றின் குறுக்கே, சிறுபாலம் அமைத்து வண்டி வழிப்பாதை ஒதுக்கி தந்தார்.
தற்போது அவரது வாரிசுகள், அந்த பாதையை அடைத்துள்ளனர். இதனால், எங்கள் பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இறந்தவர்களின் சடலங்களை கோட்டூரில் உள்ள தேவாலயத்திற்கு திருப்பலிக்காக எடுத்து செல்ல முடியவில்லை. அவசர தேவைகளுக்கு வெளியூரோ, மருத்துவமனைக்கோ செல்லமுடியவில்லை. மாற்றுப்பாதையில் செல்ல, 5 கி.மீ., தூரம் சேறும் , சகதியுமான சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது. அதிலும் வாகனங்கள் செல்ல முடியாது. எனவே, நாங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த வண்டி வழிப்பாதையை மீட்டு தர வேண்டும்.