களக்காடு, நவ. 19: திருக்குறுங்குடி அருகே பாதையை அடைத்ததை தட்டிக் கேட்ட பெண்ணை தாக்கி, அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். களக்காடு அருகே திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தரபாண்டியபுரம், தெற்குத் தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப் பாதையை இதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது. இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ஆனந்த், கனகராஜத்தை செருப்பால் தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த், இதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.