ஈரோடு,மே30: ஈரோடு மரப்பாலம், சம்மந்தர்நகரை சேர்ந்தவர் முகமது உசேன். இவரது மகன் முகமது யாசின்(23). இவர் நேற்று முன்தினம் கொல்லம்பாளையம் பகுதியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் முகமது யாசினை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். ஆனால் யாசினிடம் பணம் இல்லாததால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து யாசினை தாக்கியதோடு கையை கத்தியால் கிழித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து யாசின் ஈரோடு தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட முயன்ற ஈரோடு பச்சப்பாளி பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் தனுஷ்(19) என்பவரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.