திருப்பூர், ஜூன்30: திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்தவர் விஜய் (26). இவர் திருப்பூர், கோவில்வழி அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் விஜய் தனது சொந்த ஊர் செல்வதற்காக நேற்றுமுன் தினம் இரவு கோவில் வழி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் விஜயிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் ரூ.500 பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்து சென்றார்.
இது குறித்து விஜய் நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (எ)இதயகனி (30)என்பவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் வழிப்பறி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மோகன்ராஜ் (எ)இதயகனியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இதயகனி மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.