வள்ளியூர், ஜூன் 25: வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான இடங்களை ஒரே மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக குமாரபுது குடியிருப்பு பகுதியில் இருந்துவந்த சுமார் 2 கோடி மதிப்பிலான 60 சென்ட் நிலங்கள் கடந்த 10ம் தேதிம் மீட்கப்பட்டன. அத்துடன் அங்கு இதுகுறித்த எச்சரிக்கையுடன் கூடிய அறிவிப்பு பலகையும் அமைக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக கடந்த 20ம் தேதி கிரிவலப் பாதையில் இருந்துவந்த சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடமானது ஆக்கிரமிக்கப்பட்டதோடு வீடு கட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து தெரியவந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வீடு கட்டுமானப்பணியை தடுத்து நிறுத்தியதோடு ரூ.1.90 கோடி மதிப்பிலான 13 சென்ட் காலியிடத்தை மீட்டு எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைத்தனர்.
இந்நிலையில் வள்ளியூர் நாயக்கர் தெருவில் வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமாக இருந்துவந்த (சர்வே எண் 622) நிலத்தில் லில்லி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி குடியிருந்து வந்தார். இதுகுறித்து தெரியவந்ததும் இந்து சமய அறநிலைத்துறை சட்டப்பிரிவின் (எண் 78) கீழ் நெல்லை மண்டல இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கை தீர விசாரித்த நீதிமன்றம், வீட்டை உடனடியாக ஆக்கிரமிப்பாளர் காலி செய்வதோடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. மேலும் இந்த உத்தரவானது சம்பந்தப்பட்ட வீட்டுக் கதவில் கோயில் நிர்வாக அதிகாரி முன்னிலையில் நோட்டீசாக ஒட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பஞ். குடிநீர் இணைப்பு, சொத்துவரி, மின் இணைப்பு, ஆகியவை ரத்து செய்யப்பட்டு துண்டிக்கப்பட்டது.
மேலும் நேற்று காலை இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் வள்ளியூர் நிர்வாக அதிகாரி மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை ராதாபுரம் சரக ஆய்வாளர் முருகன், அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி மாடசாமி, கவுன்சிலர் மாடசாமி, அறங்காவலர் குழுவினர் சிவராமகிருஷ்ணன், சக்திவேல், முருகன், அனுசியா முத்துகிருஷ்ணன், உள்ளிட்டோர் இரு வீடுகள் உள்பட 7 சென்ட் இடத்தை அதிரடியாக மீட்டனர். மேலும் அங்கு சீல் வைத்தனர். இதையொட்டி வள்ளியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மீனாட்சி மாடசாமி கூறுகையில் ‘‘ முருகன் கோயிலுக்கு சொந்தமான இடங்களில் காணப்படும் பிற ஆக்கிரமிப்புகளும் முழுமையாக அகற்றப்படும். இதேபோல் குத்தகை பாக்கிகள் அனைத்தும் விரைவில் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.