பொன்னை, மார்ச் 13 : வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாள் தேர் திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளி மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் துவங்கியது.
நேற்று காலை 10 மணி அளவில் துவங்கிய 3ம் நாள் தேரோட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் பெருமாள் குப்பம் பகுதியில் வந்தடைந்தது. இதனை அடுத்து அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கர ஒலி எழுப்பி மாவிளக்கு வைத்தும், தேங்காய்கள் உடைத்தும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியை வரவேற்றனர். நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி வாணவேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகர பக்தி முழக்கத்துடன் முருகனை வழிபட்டனர். தொடர்ந்து, இன்று காலை 9 மணி அளவில் துவங்கும் 4ம் நாள் தேரோட்டம் இன்று மாலை 6.30 மணி அளவில் வள்ளி மலை தேரடி பகுதியில் தேர் நிலை நிறுத்தப்படும்.