ஓமலூர், மே 14: ஓமலூர் அருகே பனங்காடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம், சுரேஷ்குமார் ஆகியோர், 2 நாய் குட்டிகளையும், ஒரு பெரிய நாயையும் வளர்த்து வந்தனர். இந்த 3 நாய்களும் நேற்று முன்தினம் இறந்து கிடந்தது. இதுகுறித்து விசாரித்த போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் (51) என்பவர் குருணை மருந்து கொடுத்து கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷை, நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது மது வாங்கி வந்து, அதற்கு சைடு டிஸ்சாக கோழி கறியை சமைத்து சாப்பிட்டுள்ளார். மாலையில் மது குடித்து விட்டு, சாப்பிடுவதற்காக மீதி கறியை வீட்டில் வைத்திருந்தார். மாலையில் பார்த்த போது, கறி இல்லாததால் அதை நாய்கள் தான் சாப்பிட்டிருக்கும் என நினைத்து, குருணை மருந்து வைத்து நாய்களை கொன்றதாக தெரிவித்தார். இதையடுத்து, அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர்.