அணைக்கட்டு, ஆக. 18: ஒடுகத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆய்வு செய்த மண்டல உதவி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சியில் உள்ள வார்டுகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஞானசுந்தரம் திட்டப்பணிகளை திடீர் ஆய்வு செய்தார். அதன்படி பேரூராட்சியில் ₹1.71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் எரிமேடை அமைக்கும் பணி, அம்ருத் திட்டத்தில் நடைபெற்று வரும் மேல்நிலை நீர்த்தக்க தொட்டி கட்டுதல் உள்ளிட்ட குடிநீர் சார்ந்த திட்ட பணிகள் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்புகள் சரியாக உள்ளதா? மற்றும் அங்கு வேலை செய்யும் பணியாளர்களின் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து பேரூராட்சியில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) கோபிநாதன் மற்றும் பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.