வலங்கைமான், ஆக. 19: வலங்கைமான் வரதராஜம் பேட்டை தெரு மகா மாரியம்மன் கோயிலில் ஆவணி முதல் ஞாயிறை முன்னிட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலைச் சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பாடைக்காவடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வர்.வழக்கமாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் அம்மனை வழிபட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.
இதேபோல ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று பாடை காவடி பால்குடம் உள்ளிட்டவை எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஆவணி கடை ஞாயிறு அன்று ஆலயத்தின் அருகே உள்ள புனித குளத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழாவிலும்திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் செப்டம்பர் 15ம் தேதி ஆவணிக்கடை ஞாயிறு அன்று ஆலயத்துக்கு அருகில் உள்ள புனித குளத்தில் அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ரமேஷ், தக்கார், ஆய்வர் மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் சீனிவாசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.