வலங்கைமான், ஜூன் 24: வலங்கைமான் பகுதியில் மகளிர் காவல் நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர . திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1927ஆம் ஆண்டு காவல் நிலையம் துவங்கப்பட்டது.வலங்கைமான் காவல் நிலையமானது மேற்கு பாபநாசம் காவல் நிலையத்தையும் வடக்கே நாச்சியார் கோவில் காவல் நிலையத்தையும் கிழக்கே குடவாசல் காவல் நிலையத்தையும்தெற்கேநீடாமங்கலம் காவல் நிலையத்தையும் எல்லைகளாக உள்ளடக்கியதாக உள்ளது.காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியாக வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகள் மற்றும் 29தாய்கிராமங்கள் 63 குக் கிராமங்கள் உள்ளிட்ட 93 கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக வலங்கைமான் தாலுகா தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து திருவாரூர் மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது அப்போது வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட நல்லூர் அன்னுக்குடி மதகரம் மாளிகை திடல் உத்தமதானபுரம் உள்ளிட்ட 12 தாய் கிராமங்கள் மற்றும் முப்பத்தி ஒன்பது குக்கிராமங்கள் ஆகியவை பாபநாசம் காவல் நிலையத்தில் இருந்து பிரிக்கப்பட்டு பின்னர் வலங்கைமான் காவல் நிலையத்துடன் கூடுதலாக இணைக்கப்பட்டது.
இதன் காரணமாக தற்போது வலங்கைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகலாக 41 கிராமங்கள் மற்றும் 102 குக்கிராமங்கள் என 143 கிராமங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மக்கள்தொகை சுமார் ஒரு லட்சத்தை விட கூடுதலாகும். முன்னதாக மக்கள் தொகை பன்மடங்கு உயர்ந்த நிலையிலும் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்கள் கூடுதலாக இணைக்கப்பட்ட நிலையில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பரப்பு கூடுதலாக உள்ளது .வலங்கைமான் காவல் நிலையத்திலிருந்து தெற்கே சுமார் 15 கிலோமீட்டர் மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் அளவு தூரம் எல்லையாக உள்ளது. தற்போது வலங்கைமான் தாலுகாவில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.