வலங்கைமான், ஆக. 29: வலங்கைமான் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ள அரவத்தூர் – மாணிக்கமங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரவூர் ஊராட்சியில் அரவத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை அரவத்தூருக்கும் மாணிக்கமங்கலத்துக்கும் இணைப்பு சாலையாக உள்ளது.
சுமார் 800 மீட்டர் தூரமுள்ள இந்த இணைப்பு சாலையானது, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதுப்பிக்கப்படாததால் சாலையில் கப்பிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், இரு சக்கர வாகனங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே, அரவத்தூர்- மாணிக்கமங்கலம் இணைப்பு சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.