திருவாரூர், ஜூன் 28: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மினி வேனில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்தில் எஸ்.பி கருண்கரட் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை, ஆன்லைன் லாட்டரி விற்பனை மற்றும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது, மணல் கடத்தல், திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
மேலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வரும் நிலையில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வருபவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று வலங்கைமான் போலீஸ் சரகத்திற்குட்பட்ட விருப்பாச்சிபுரம் என்ற இடத்தில் சப்இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது அந்த வழியாக வந்த மினி வேன் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்த போது அதில் எவ்வித அனுமதியும் இல்லாமல் அரை யூனிட் அளவில் மணல் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து மணலை கடத்தி வந்த வலங்கைமான் பாதிரிபுரம் வடக்கு தெருவை சேர்ந்த அன்புஐயா (54) என்பவரை கைது செய்ததுடன் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினிவேனையும் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டத்தில் இதுபோன்று சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி கருண்கரட் தெரிவித்துள்ளார்.