கோவில்பட்டி, ஆக. 12: கோவில்பட்டி கோட்டத்தை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி இந்திய கம்யூ. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கோவில்பட்டி கோட்டத்துக்குட்பட்ட கயத்தாறு, கோவில்பட்டி விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ₹15,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூ. மாவட்ட துணை தலைவர் பாலமுருகன் தலைமையில் விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.