சிதம்பரம், ஆக. 14: வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் தடுப்பணை, கதவணை கட்ட வலியுறுத்தி சிதம்பரம், புவனகிரி பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தின் முக்கிய ஆறுகளாக விளங்குவது கொள்ளிடம் மற்றும் வெள்ளாறு. இந்த ஆறுகளில் கடல் நீர் உட்புகுந்து தண்ணீர் உப்பு நீராக மாறி விட்டது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடலூர் மாவட்ட எல்லையான கருப்பூர் கிராமத்திற்கும், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான மாதிரவேளூர் கிராமத்திற்கும் இடையே கதவணை கட்ட வலியுறுத்தி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டம் கைவிடப்படும் நிலையில் உள்ளது.
இதுபோல் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பு.ஆதிவராகநல்லூர் கிராமத்தில் தடுப்பணை கட்ட வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த இரு திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சிதம்பரம், புவனகிரி பகுதியில் வர்த்தகர் சங்கத்தின் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை முதல் 11 மணி வரை சிதம்பரம், புவனகிரி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
புவனகிரி கடைவீதி, சின்ன தேவாங்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதம்பரம் மேல வீதி, கீழவீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, காசுகடை தெரு, போல்நாராயண தெரு, எஸ்பி கோயில் தெரு, சபாநாயகர் கோயில் தெரு, பேருந்து நிலையம் செல்லும் பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நகை கடை, கவரிங் கடை, மளிகை கடை, ஜவுளிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. அதேபோல் மருந்தகங்கள், பால் கடைகள் திறந்திருந்தன. காலை 11 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு, வழக்கம்போல் இயங்கின.