மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடுதல் மற்றும் புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல் குறித்து அரசு அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில், வரைவு வாக்குச்சாவடி பட்டியலில் உள்ள வாக்குச்சாவடிகளை நேரடி ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிட உறுதித்தன்மையை கண்காணிக்க வேண்டும்.
மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,727 வாக்குச்சாவடிகளில் 1500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பவற்றை 2 பாகங்களாக பிரித்திட வேண்டும். வாக்குச்சாவடி மையங்களின் இடமாற்றம், பெயர் மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைத்தல் ஆகியவை குறித்து அரசியல் கட்சியினரின் கருத்துக்களை பெற்று செப்.3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் பணிகளை முடித்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இப்பணிகளுக்கு அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் சங்கீதா கேட்டுக்கொண்டார்.