திருப்பூர், ஜூன் 19: பட்டுக்கோட்டையார்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு விரைவாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை செயலாளர் அமுதாவிடம், செல்வராஜ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.திருப்பூர் மாநகராட்சி பட்டுக்கோட்டையார்நகர் பகுதியில் 192 குடும்பத்தினர் நீண்டகாலமாக வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு தொகுதி செல்வராஜ் எம்எல்ஏ அந்த பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.
சென்னை நிலசீர்த்திருத்த ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் அரசிடம் இருந்து, சம்பந்தப்பட்ட 192 பேரின் தற்போது வசிக்கும் இடம், அவர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், வருமானம் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் தெற்கு தாசில்தார், திருப்பூர் ஆர்டிஓ ஆகியோர் இந்த விவரங்களை பெற்று அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து செல்வராஜ் எம்எல்ஏ வருவாய்த்துறை செயலாளர் அமுதாவை சென்னையில் சந்தித்து, பட்டுக்கோட்டையார் நகர் பகுதி மக்களுக்கு விரைந்து பட்டா வழங்குவது தொடர்பாக வலியுறுத்தினார்.