ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் தான்தோன்றியம்மன் கோயிலுக்கு தாய் வீட்டு சீர்வரிசை பொருட்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கினர். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஸ்ரீ தான்தோன்றி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆடி மாதத்தை முன்னிட்டு தீமிதி திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான திருவிழா கடந்த 9ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வரும் 18ம்தேதி அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் சார்பில் தாய் வீட்டு சீர்வரிசை பொருட்கள், தான்தோன்றி அம்மன் கோயிலுக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு சீர்வரிசையாக பட்டு சேலை, வளையல், மஞ்சள், குங்குமம், அபிஷேகப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் பழ வகைகள் என தாசில்தார் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் மேளத்தளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்துச்சென்று கோயிலுக்கு வழங்கினர். நிகழ்வில் வருவாய் துறை அதிகாரிகள், விழா குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.