தண்டராம்பட்டு, நவ.6: தண்டராம்பட்டு தாலுகா அலுவலகம் எதிரே நேற்று வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் கிராமத்தை சேர்ந்த குமார்(38) என்பவர் கடந்த மாதம் 24ம்தேதி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் துணை தாசில்தார் மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசில்தார் மோகனராமன் ஆலோசனையின்பேரில் வருவாய்த்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.
ஆனால், நேற்று வரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து, நேற்று மாலை நேரடி நியமன வருவாய்த்துறை ஊழியர்கள் சங்கம் வட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமையில் தண்டராம்பட்டு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், சர்வேயர், கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.