தென்காசி, ஆக.31: ஐகோர்ட் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் மனோஜ்முனியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி தென்காசியில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க வட்டக்கிளை சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரின், அரசு ஊழியர் விரோதப்போக்கை கண்டித்தும், வருவாய்த்துறை ஊழியர்களின் மீது பணிச்சுமை திணிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான பணியாளர்கள் பங்கேற்றனர். மானூர்: மானூர் தாலுகா அலுவலகத்திலும் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு வேலை நிமித்தம் காரணமாக தாலுகா அலுவலகம் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.