கோவை, ஜூன் 26: கோவை மாவட்டத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஊழியர்கள் சுமார் 1200 பேர் நேற்று பணிகளை புறக்கணித்து தற்செயல் விடுப்பு எடுத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் 7 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.
வருவாய், பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர், உடைமைகளைக் காக்கும் வகையில் சிறப்பு பணிப் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அனைத்து நிலையிலான காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பணி நெருக்கடி ஏற்படுகிறது.
குறிப்பாக, களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.