திருவண்ணாமலை, ஜூன் 25: திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தவர்கள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்திருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவைபுரிபவர்களை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று மாநில அளவில் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு, 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், ரூ.50 ஆயிரம் மற்றும் சான்றிதழ், சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்துக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூகப்பணியாளருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுகளுக்கு தகுதியுள்ள நபர்கள் சம்மந்தப்பட்ட இணையதளத்தில் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் விண்ணப்பித்ததை பதிவிறக்கம் செய்து, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இரண்டு நகல்கள் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.