நன்றி குங்குமம் தோழி கோடை காலம் தொடங்கிவிட்டது. எதிர்பார்த்தது போலவே வெப்பமும் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. உலகின் சராசரி வெப்ப இயல்பை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து விட்டது என்று ஆய்வுகள் அதிர்ச்சி தகவல் கள் தெரிவிக்கும் அதே நேரம் கோடைகாலத்திற்கான நோய்களும் நம்மை பதம் பார்க்க தயாராகி விட்டது என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். நம் உடலானது எல்லா தட்பவெப்ப நிலைக்கும் இயல்பாக பழகிக் கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்ததுதான். இருப்பினும் ஒவ்வொருவரின் உடலின் எதிர்ப்பு சக்தியின் தன்மையை பொருத்து அது மாறுபடவும் செய்கிறது.பொதுவாக 98 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் உடல் அதற்கு மேல் போகும் போது தன்னை குளிர்விக்க வியர்வை சுரப்பிகள் வழியே வியர்வையை நீராய் வெளியேற்ற தொடங்கும். என்னதான் தற்காப்பு செயலாக இருப்பினும் அதிக வெப்பமானது நமது உடலின் நீர்ச்சத்தை குறைத்துவிடும். அதே நேரம் உடலை வெகுவாக சோர்வடையவும் செய்துவிடும். சராசரியை விட அதிகமான தட்பவெப்ப மாறுபாடுகள் உடலின் எதிர்ப்பு சக்திக்கு ஏற்படும் சவாலாகும். அதுவே அசாதாரண சூழலில் நோய் தொற்றுக்கும் வழி வகுக்கிறது.கோடை காலங்களில் பல்வேறு நோய்கள் உடலை தாக்கும் அபாயம் உள்ளது. சரும நோய் தொடங்கி, தட்டம்மை, சின்னம்மை, கண் வறட்சி, மூளை பக்கவாதம், மஞ்சள் காமாலை என கோடை காலத்திற்கான நோய்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. பொதுவாக குழந்தைகளையும் முதியவர்களையுமே நோய் எளிதில் தாக்குகிறது. அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்திக்கான அளவு வயது காரணமாக மாறுபடுவதே இதற்கு முக்கிய காரணம். டிஹைட்ரேசன் (Dehydration) என அறியப்படும் நீர்ச்சத்து குறைபாடு கோடை காலங்களில் அதிகம் ஏற்படகூடிய பிரச்சனையாகும். அதிகமான நீரை உடல் இழக்க நேரிடும் போது அதை ஈடுகட்டும் விதமாக தண்ணீரோ அல்லது பழச்சாறோ அருந்துதல் அவசியம்.ஒரே ஒரு சதவிகிதம் டிஹைட்ரேசன் கூட பல எதிர்மறை மாற்றங்களை உடலில் ஏற்படுத்தி விடக் கூடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதாவது டிஹைட்ரேசன் காரணமாக மூளைக்கும், இதயத்திற்கும் பயணிக்கக்கூடிய ரத்தமானது அடர்த்தியாகி ரத்த ஓட்டம் குறைவதால் மூளையில் ஸ்ட்ரோக் (Brain stroke) உள்ளிட்ட விபரீதங்கள் ஏற்படலாம். ஆகவே தாகம் இருக்கிறதோ இல்லையோ கோடை காலங்களில் சராசரியாக மூன்று லிட்டர் தண்ணீராவதுநாளொன்றுக்கு பருக வேண்டும். மேலும் அதிக வெப்பமானது வயிற்றில் ஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். ஆகவே அசைவ உணவுகளை குறைத்துக் கொண்டு நார்ச்சத்து நிரம்பியுள்ள சைவ உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்வது அவசியம்.கோடை காலங்களில் நமது உடலின் பி.எம்.ஆர் (Basal Metabolic Rate- BMR) எனப்படும் ஒரு வித உடல் இயக்க தன்மை வேலை செய்வது சீராக இல்லாமல் மாறுபாடுடன் காணப்படும்.அந்த நேரங்களில் உடலால் வழக்கமாக செய்யக்கூடிய ‘‘மெட்டபாலிக்” வேலைகளை சீராக செய்யமுடியாது. அதற்கு காரணம் ஏற்கனவே உடல் அதிக வெளிப்புற உஷ்ணத்தினால் சோர்வடைந்து இருப்பதுதான். இந்நிலையில் நாம் உண்ணும் உணவுகளில் கவனம் செலுத்துவது மிக அவசியம். எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகவும், அதிக நீர்ச்சத்து உள்ள உணவாகவும் உண்பது மிகவும் முக்கியம்.இயற்கை அன்னையின் கட்டுப் பாட்டில் எல்லாமே மனிதனுக்கு சாதகமாகவே உள்ளது. அதனாலயே நீர்ச்சத்து நிரம்பியுள்ள தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு போன்ற பழங்கள் கோடையில் அதிகமாக கிடைக்கின்றது. இந்த பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ போன்ற பலச் சத்துக்கள் நிறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவு பச்சைக் காய்கறிகளும், கீரையும் எடுத்துக் கொள்வதும் உடல் இழக்கும் மைக்ரோ மினரல்ஸை பெருமளவில் மீட்டு தர உதவும். ‘‘ஆன்டி ஆக்சிடன்ட்” (Anti-oxidant) எனப்படும் ஒரு வகை நுண்ணூட்ட சத்துக்கள் நம் உடலில் கேன்சர் உருவாக்கும் அணுக்களை அழிக்கும் சக்தி வாய்ந்தது.அது உடலுக்கான எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் வல்லமை வாய்ந்தது. கோடைகாலங்களில் அதிக சூரிய ஒளி தாக்கத்தால் தோல் புற்றுநோய்கள் வராமல் இருக்கவும் ‘‘ஆன்டி ஆக்சிடன்ட்” நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது மிக மிக அவசியம். பொதுவாக மஞ்சள், கருநீலம், கருஞ்சிவப்பு நிறத்தினால் ஆன காய்கறிகள் மற்றும் பழங்களில் ‘‘ஆன்டி ஆக்சிடன்ட்”கள் அதிகம் காணப்படும். சூரியனின் புற ஊதாக்கதிர்கள் வீச்சு அதிகமாக இருக்கும் காலை பத்து மணி முதல் மாலை மூன்று மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.எப்போதும் தேவையான தண்ணீரை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும். வெப்பத்தில் இருந்து தப்பிக்க ஒரேடியாக ஏசி அறையில் தஞ்சம் புகாமல் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் இயற்கை காற்றில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலுக்கும் மனதிற்கும் மிகவும் நல்லது. ஏதோ ஒரு வகையில் இயற்கை மனிதனால் சுரண்டப்பட, இயற்கை நமக்கு திரும்ப தந்து கொண்டிருக்கும் பாடம்தான் சுட்டெரிக்கும் கோடையும், அதன் விளைவுகளும். நல்ல உணவும், வாழ்க்கை முறையையும் பின் பற்றினால் போதும் கோடை வெப்பத்தையும், அதன் நோய் தாக்கத்தையும் பெருமளவு சமாளித்து பயணிக்கலாம். வரும் முன் காக்கலாம்.-முனைவர். தி.ஞா.நித்யா…
வருமுன் காப்போம்!
previous post