வருசநாடு, அக். 16: வருசநாடு, காந்திகிராமம், வெள்ளிமலை உள்ளிட்ட பகுதியில் திடீரென இடியுடன் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடமலை மயிலை ஒன்றியத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு உள்ளிட்ட பகுதியில் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கடமலை மயிலை ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் 3 மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.
அதன் காரணமாக அந்தந்த பகுதிகளில் உள்ள மூல வைகை ஆறுகள் மற்றும் ஓடைகள் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்பு ஓடை சாலைகளில் நீர்வரத்து ஏற்பட்டதை கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு பகுதியில் மூல வைகை ஆற்றில் வருகின்ற நீருக்கு பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்து ஆற்றை வணங்கி விட்டு சென்றனர்.