வருசநாடு, ஜூன் 5: வருசநாடு அருகே தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், வருசநாடு ஊராட்சிக்கு உட்பட்ட தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழக அரசு அவர்களின் கோரிக்கையை ஏற்று, ரூ.6 கோடி மதிப்பில் இந்தப் பகுதியில் பாலம் அமைக்க முடிவு செய்தது. இதற்காக சில மாதங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு கட்டுமான பணி தொடங்கப்பட்டது. ஆனால் இந்தப் பணிகளை வனத்துறையினர் தடை செய்து விட்டனர். அதனால் பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால் பல்வேறு பணிகளுக்காக ஆற்றைக் கடந்து சென்றுவரும் பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் சிரமமடைகின்றனர்.
ஆற்றில் தண்ணீர் செல்லும் போதும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். விளைபொருட்களை கொண்டு செல்வதில் தாமதமும், அதிக செலவினமும் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தர்மராஜபுரம் பகுதியில் பாலம் கட்டும் பணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.