வருசநாடு, செப். 8: வருசநாடு அருகே கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (72). கூலித்தொழிலாளி. இவர் மனைவி இறந்து விட்டதால், கீழபூசனூத்து கிராமத்தில் உள்ள அவரது மகள் சின்னப்பொண்ணுவின் வீட்டில் வசித்து வந்தார். இரவு நேரத்தில் மட்டும் லட்சுமணன் அதே கிராமத்தில் உள்ள ரேஷன் கடை வராண்டாவில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சதீஷ்குமார் (33) என்பவரும் இரவு நேரத்தில் சேர்ந்து தூங்கி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையில் தூங்குவது தொடர்பாக லட்சுமணன், சதீஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது இனி ரேஷன் கடையில் தூங்க வந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என சதீஷ்குமார் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக சதீஷ்குமாரின் பெற்றோரிடம் லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கீழபூசனூத்து கிராமத்தில் கனமழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்க இடம் இல்லாததால் லட்சுமணன் ரேஷன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே ஏற்கனவே தூங்கிக் கொண்டிருந்த சதீஷ்குமார் விழித்தெழுந்து லட்சுமணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கு சென்ற சின்னப்பொண்ணு, இன்று ஒரு நாள் மட்டும் ரேஷன் கடையில் தூங்கிக் கொள்ளட்டும் என சதீஷ்குமாரை சமரசம் செய்து விட்டு வந்திருக்கிறார்.
இரவு தூங்கி கொண்டிருக்கும்போது முன்பகையை மனதில் வைத்திருந்த சதீஷ்குமார் கீழே கிடந்த கல்லை எடுத்து லட்சுமணனின் தலையில் போட்டு அவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மறுநாள் காலையில் லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவம் தொடர்பாக வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வருசநாடு பகுதியில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.