மதுரை, ஆக. 11: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டன. வருகிற 2024ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்த்தல் பணி கடந்த ஆக.4ம் தேதி துவங்கியது. மதுரையில் டாக்டர் தங்கராஜ் சாலையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கில் அங்கீகரிக்கப்ட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வருவாய்த்துறை, மாநகராட்சி அலுவலக பணியாளர்கள், பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்கள் ஆகியோரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, மொத்தம் 7,182 வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வு கலெக்டர் தலைமையில் அங்கீரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிகள் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது. இப்பணிகள் நேற்று நிறைவடைந்தது. மாதிரி வாக்குப்பதிவு முடிந்தவுடன் பயன்படுத்த இயலாத வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.