வேலூர், அக்.27: நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்று தரும் வரலாற்றை படித்து நமது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும் என என முத்துரங்கம் கலைக்கல்லூரியில் நடந்த விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசினார்.
தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லுாரியில் வரலாறு பாட திட்டத்தில் பயிலும் 79 மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ‘கதை சொல்லும் கலை மற்றும் அறிவியல்’ என்ற பாடம் 45 மணிநேர பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலுார்- வரலாற்றுச் சுவடுகள் என்ற தலைப்பில் நடந்த நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து பேசுகையில், ‘வரலாறு நமக்கு வாழ்க்கை பாடத்தை கற்று தருகிறது. வரலாற்றை படித்து நமது தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். வன்முறையும் ஒரு வகை போர் தான். மனிதகுலத்திற்கு அழிவை தரும் வன்முறையை தவிர்க்க வேண்டும். வேலூர் மாவட்டம் வரலாற்றில் தனி இடத்தை பிடித்துள்ளது. இதே போல் அனைத்து துறைகளிலும் நாம் தனி இடத்தை பிடிக்க வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் காயத்திரி தனியார் நிறுவன இணை நிறுவனர் நீனா காயத்ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வரலாற்று சுவடுகளை விளக்கும் விதமாக மாணவர்கள் ராஜா காலத்து உடைகள் அணிந்து கலெக்டரை வரவேற்றனர். மேலும் கல்வெட்டை செதுக்கும் சிற்பி அசோக மன்னர் காவல் வீரர்கள் என மாணவர்கள் அந்த கால உடைகளை அணிந்து அசத்தினர். முன்னதாக கல்லூரி முதல்வர் மலர், சுதந்திர போராட்ட வீரமங்கை வேடமணிந்து வந்தார்.