போச்சம்பள்ளி, ஆக.17: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரோஜா, சாமந்தி, செண்டுமல்லி, கனகாம்பரம், குண்டுமல்லி உள்ளிட்ட பல வகை பூக்களை ஆயிரக்கனக்கான ஏக்கரில் பயிரிட்டுள்ளனர். முக்கிய பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பூ சாகுபடி நடக்கிறது. சாதாரண நாட்களில் பூக்கள் விலை குறைந்து, விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. அதே நேரம், பண்டிகை நாட்களில் அதிக விலைக்கு பூக்கள் விற்பனையாகி லாபம் ஈட்டுகின்றனர். மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பூக்கள், தமிழத்தின் பல மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. போச்சம்பள்ளி, குள்ளம்பட்டி, சந்தம்பட்டி, மாதிநாயக்கன்பட்டி, மலையாண்டஅள்ளி, வேலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், அதிக பரப்பில் குண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வருடம் முழுவதும் வருவாயை ஈட்டி தரும் மல்லிகைக்கு, பெங்களூரு மார்க்கெட்டில் எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. கடந்த மாதங்களில் குண்டுமல்லி கிலோ ₹200 முதல் ₹250 வரை விற்பனை ஆனது. நேற்று வரலட்சுமி நோன்பு, ஆடி கடைசி வெள்ளி என்பதால் பூக்கள் விலை பல மடங்கு உயர்ந்து, ஒரு கிலோ குண்டுமல்லி 1500க்கு விற்பனை ஆனது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வரலட்சுமி நோன்பையொட்டி பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
previous post