Sunday, June 4, 2023
Home » வயிற்றுவலியைப் போக்கிய வைத்தியநாதர்

வயிற்றுவலியைப் போக்கிய வைத்தியநாதர்

by kannappan
Published: Last Updated on

உக்கல்- காஞ்சிபுரம் இறை மகத்துவம் என்பது வெறும் வாய்ச் சொல்லால் விளக்கிட முடியாத ஒன்று. அப்படிப்பட்ட இன்றியமையாத இறைவழிபாடும், இறைவடிவங்களைத் தாங்கி நிற்கும் ஆலயங்களையும் நாம் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய தொண்டைமண்டலத்தின் பொக்கிஷ ஆலயமாகத் திகழ்கிறது `உக்கல் ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி’ திருக்கோயில். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீபெருந்திரனான் என்று போற்றப்பட்ட உக்கல் ஆலயத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக்கொண்டு, பல்லவநாட்டை கி.பி. 685 முதல் கி.பி. 705 வரை ஆட்சி செய்தார் பல்லவ மன்னன் இராஜசிம்மன். இவர், இரண்டாம் நரசிம்மவர்மன் என்றும் அழைக்கப்பட்டார். சிறந்த சிவபக்தர். காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற கயிலாசநாதர் மற்றும் மாமல்லபுரம் கடற்கரையில் உள்ள குடைவரை ஆலயங்களையும் கட்டிய பெருமையைக் கொண்டவர். இவர் ஒரு சமயம், தீராத வயிற்று வலியால் அவதியுற்றார். இவரது கனவில் தோன்றிய கயிலாசகிரிநாதர், ‘சேயாற்றின் அருகில் உள்ள எமது திருத்தலத்தை அடைந்து வழிபாடு செய்ய, உனது தீராத வயிற்று வலி தீரும்’’ என அருள்புரிந்தார். அதன்படி, சேயாற்றின் வடகரையில் உள்ள உக்கல் திருத்தலத்திற்கு வந்த நரசிம்மவர்மன், ஸ்ரீவைத்தியநாதப் பெருமானை மனங்குளிர அபிஷேகித்து, பட்டாடைகள் சாற்றி, பல்வகை மலர்களால் மாலை தொடுத்து சூட்டினான். பலவகை நைவேத்தியங்களையும், பலகாரங்களையும் படைத்தான். மகிழ்ந்த பரமேஸ்வரர், ஒரு சித்தர் வடிவில் தோன்றி தல விருக்ஷமான வில்வத்தை மருந்தாகத் தந்து சாப்பிடச் சொன்னார். சாப்பிட்ட சற்றுநேரத்தில், வயிற்று வலி காணாமல் போனது. சித்தர் வடிவில் வந்த சிவபெருமானுக்கு நன்றி தெரிவிக்க நினைத்த அரசன், அவரை எங்கு தேடியும் கிடைக்காததை கண்டு நெகிழ்ந்தான். தனக்கு வைத்தியம் பார்த்தது அந்த வைத்தியநாதப் பெருமானே என்பதை உணர்ந்து, அளவில்லாத ஆனந்தம் அடைந்தான். அதோடு, இக்கோயிலின் முழு திருப்பணிகளுக்கும் உத்தரவிட்டார். அன்று முதல் இத்தல ஈசர், ஸ்ரீ பெருந்திரனார் வைத்தியநாதர் என்று போற்றலானார்.இந்த இரண்டாம் நரசிம்மவர்மன், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரம் அருகிலும் சிவாலயத்தை எழுப்பியுள்ளான். இக்கோயில்களில், இவரது 250 பட்டப் பெயர்கள் கல்வெட்டின் வாயிலாக காணக் கிடைக்கின்றன. அப்பட்டப் பெயர்களுள் ஒன்று சிவசூளாமணி என்பதாகும். வேதம் ஓதும் அந்தணர்களுக்கென்று பல ஊர்களை அமைத்து, அதை அவர்களுக்குத் தானமாகவும் கொடுத்துள்ளதால் ‘‘சிவசூளாமணி” என்று பலரால் போற்றப்பட்டான். அதுபோல், உக்கலிலும் பிராமணர்களுக்கு என நிலங்கள் ஒதுக்கி, நாளும் வேதம் ஓதிட வழிவகை செய்தான். இதனால், உக்கல் அந்நாளில் நரசிம்மவர்மனின் பட்டப்பெயரோடு `உக்கல் சிவசூளாமணி மங்கலம்’ என்று பெயர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.கி.பி. 878 முதல் கி.பி. 883 வரை ஆட்சிபுரிந்த பல்லவ மன்னன் கம்பவர்மன் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் உட்கர் என வழங்கப்பட்டுள்ளது. கி.பி. 872 முதல் கி.பி. 890 வரை காஞ்சியை ஆண்டது அபராஜிதவர்மன். இவரே, திருத்தணிகை முருகன் ஆலயத்தை கட்டிய பெருமைக்குரியவர். இவரது ஆட்சிக் காலத்தில், இவ்வூர் சிவசூளாமணி மங்கலமாகிய ‘அபராஜிது சதுர்வேதி மங்கலம்’’ என்று அழைக்கப்பெற்றுள்ளது.பின்னர், கி.பி. 894ல் தொண்டை நாட்டினை ஆட்சிபுரிந்த சோழ மன்னனான முதலாம் ஆதித்த சோழன் காலத்திலும், இப்பெயரே வழக்கத்தில் இருந்துள்ளது. இவ்வூரில் உள்ள திருமால் ஆலய கல்வெட்டில், கி.பி. 999ல் ஆட்சிபுரிந்த முதலாம் இராஜராஜனின் காலத்தில் பராந்தக சோழனின் விருதுப் பெயர்களுள் ஒன்றான விக்கிரமாபரணன் என்பதனை சேர்த்து, ‘‘தனியூர் உக்கலான விக்கிரமாபரணச் சதுர்வேதிமங்கலம்” என பதிவிடப்பட்டுள்ளது. பல்வேறு காலகட்டத்தில் பல மன்னர்கள் இந்த உக்கல் ஆலயத்தின்மீது கொண்ட பற்று நன்கு விளக்கப்படுகின்றது. ஊரின் வடமேற்கு மூலையில் ஆலயம் அமைந்துள்ளது. தென்முகத் தோரணவாயில் நம்மை வரவேற்கின்றது. இராஜகோபுரம் காணப்படவில்லை. உள்ளே நுழைந்ததும், விசாலமான இடப்பரப்பு. இங்கே நந்தி மண்டபம், பலிபீடம் மற்றும் கொடிமரம் காணப்படுகின்றன. தோரணவாயிலின் நேராக தென்முகம் பார்த்தவாறு அமையப்பெற்றுள்ளது அம்பிகையின் தனிச் சந்நதி. முன் மண்டபம், அர்த்த மண்டபம் மற்றும் கருவறை என்கிற அமைப்பில் அம்பாள் சந்நதியுள்ளது. அம்பிகையாக ஸ்ரீ மரகதாம்பிகை அற்புதத் திருமேனி கொண்டு புன்னகை சிந்துகின்றாள். அதன்பிறகு, இறைவனைக் காண செல்கின்றோம். முன் மண்டபம் மிகவும் விசாலமான கருங்கல் திண்ணைகளுடன் கூடியது. கடந்து உள்ளே செல்ல, மகாமண்டபத்தின் வலது – இடது புறங்கள் திறந்தவெளியாக உள்ளது. வடபுறத் திண்ணைமீது உள்ள ஆதிசாஸ்தாவான ஐயப்பன் சிலை மிகவும் அபூர்வமானது. யோக பட்டையுடன் வலது காலை மட்டுமே மடக்கியபடி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை இங்கு மட்டுமே காணமுடியும் என்பது விசேஷமாகும். உடன் ஸ்ரீகணபதியும், பைரவரும் உள்ளனர். பின் நீண்ட இடை மண்டபம். அதன் வடபுறம் நடராஜர் சந்நதி. உடன் ஏனைய உற்சவ மூர்த்தங்களும் வைக்கப்பட்டுள்ளன.கருவறைக்குள் பிணி தீர்க்கும் பெருமானாக திருவருள்புரிகின்றார் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி. வழவழ பச்சைக் கல்லிலான பாணம். வட்ட வடிவிலான ஆவுடையார். பார்த்தவுடன் பக்தர்களை தன்பால் ஈர்த்து, உள்ளத்தை உருக வைக்கின்றார். இப்பெருமான், பெருந்திருக்கோயில் பெருமானடிகள் என்றும், பெருந்திருக்கோயில் மகாதேவர் என்றும், பெருந்திருக்கோயிலுடைய நாயனார் என்றும் அழைக்கபெற்றுள்ளார்.ஆலய வலம் வருகையில் கோஷ்ட தெய்வங்கள் முறையே ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நர்த்தன கணபதி அழகோ அழகு. தென்முகக் கடவுளான ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சற்றே இடதுபக்கம் திரும்பியபடி கால்மீது கால்மடித்து கலையெழில் கொஞ்ச காட்சி தருகின்றார். தல கணபதியின் சந்நதி ஆலய தென்மேற்கு மூலையிலும், வள்ளி,  தெய்வானை உடனான ஸ்ரீ ஷண்முகர் சந்நதி வடமேற்கு மூலையிலும் உள்ளன. கருவறையின் வெளிப்பக்க சுவற்றில், கல்வெட்டு சாசனங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன.பழமையானதொரு சிவாலயம். திருப்பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அமைதியான சூழலில் அமைந்திருப்பதால், மனம் ஆனந்தத்தில் திளைக்கின்றது. இனிமை சுரக்கின்றது. தல விருட்சமாக வில்வமும், தல தீர்த்தமாக ரோக நிவாரண தீர்த்தமும் திகழ்கின்றன. தினமும் ஒருகால பூஜை நடந்திடும் இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும். தீராத பிணிகளால் அவதிப்படுபவர்கள் ஸ்ரீவைத்தியநாதருக்கு அபிஷேகித்த ஜலத்தை பருகிட நிவர்த்தி ஏற்படும். திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டத்தில் உள்ள இவ்வூர் காஞ்சிபுரம், வந்தவாசி சாலையில் உள்ள கூழமந்தலில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உக்கல்.தொகுப்பு: பழங்காமூர்.மோ.கணேஷ்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi