நாங்குநேரி, நவ. 7: மூன்றடைப்பு அருகே வயலில் மாடு மேய்ந்ததை தட்டிக்கேட்டவருக்கு சரமாரி வெட்டு விழுந்தது. நெல்லை அடுத்த மூன்றடைப்பு அருகே வாகைகுளம் மணிமேகலை தெருவைச் சேர்ந்த சங்கரசுப்புவின் மகன் மகேந்திர குமார் (44). விவசாயியான இவரும், இவரது மனைவி ஆரோக்கியமேரி என்பவரும் சம்பவத்தன்று வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இவர்களது வயலில் கலைஞர்நகரை சேர்ந்த ஊசி காட்டானின் மகன் ராஜபாண்டி என்பவர் மாடுகளை மேயவிட்டாராம். இதைப் பார்த்த மகேந்திரகுமார் ராஜபாண்டியை கண்டித்து தட்டிக்கேட்டார். இதையடுத்து ராஜபாண்டி தனது மகனான மனோகர் மனைவி பாலம்மாள், தம்பி முத்துப்பாண்டி, மகன் சஞ்சய் ஆகியோரை பின்னர் அழைத்துவந்து மகேந்திரகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார். அத்துடன் அரிவாள், மண்வெட்டி போன்ற ஆயுதங்களால் மகேந்திரகுமாரை வெட்டி தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் கால் விரலில் வெட்டுப்பட்ட மகேந்திரகுமார் வேதனையால் அலறினார். அதை கேட்டுவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.