ஏக்கருக்கு 1.2 கிலோ உளுந்து விதை ரூ.60 ரூபாய் தென்காசி மாவட்டத்தில் கிளாங்காடு, புளியரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ‘வயலில் நெல்லு வரப்பில் உளுந்து’ என்ற முறையில் தங்கள் வயல்களில் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் மற்றும் வருமானம் ஈட்டி வருகின்றனர் என்கிறார் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன். இந்த பயிர் சாகுபடி முறை குறித்தும், அதை விவசாயிகள் மத்தியில் பரவலாக கொண்டு சென்று செயல்படுத்தியது குறித்தும் வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீனிடம் கேட்டோம். ‘‘தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை ஒவ்வொரு ஆண்டும் உணவு தானிய உற்பத்தியில் குறியீடு நிர்ணயம் செய்து மக்கள் தொகைக்கு ஏற்ப நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்காக பல்வேறு முயற்சிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. உணவு உற்பத்தியில் பயறு வகை பயிர்கள் என்பது முக்கிய இடத்தை பெறுகிறது. தமிழர்களின் அன்றாட உணவு பழக்கத்தில் பயறு வகை பயிர்கள் எல்லா உணவுகளிலும் இணைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பயறுகளில் உயர்ந்ததாக கருதப்படும் கருப்பு உளுந்து மானாவாரி நிலங்களிலும், நஞ்சை தரிசிலும், இறவையிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில் நீர் வசதியுள்ள பகுதிகளில் பல லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இரண்டு வயல்களுக்கு இடையே நெல் வயலில் வரப்புகள் இருக்கும். தமிழ்நாடு வேளாண்மை உழவர் நலத்துறை அந்த வரப்பின் ஓரங்களில் விவசாயிகள் உளுந்து ஊன்றுவதை உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் வரப்பில் உளுந்து ஊன்றுவதை விவசாயிகளிடம் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு ஏக்கருக்கு 1.2 கிலோ உளுந்து விதையினை 60 ரூபாய்க்கு மானியத்தில் வழங்கி வருகிறது. செங்கோட்டை வட்டாரத்தில் புளியரை, இலத்தூர், புதூர், கற்குடி, கிளாங்காடு, ஆய்க்குடி, சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மத்தியில் சிறப்பு முகாம்கள் நடத்தியும், விதைகளை வழங்கியும் வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதை ஊக்கப்படுத்தி வருகிறோம். இவ்வாறு வரப்பில் உளுந்து ஊன்றுவதால் மூன்று விதமான நன்மைகள் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. முதலாவதாக பயறு வகை பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டு, சிலந்தி, குழவி, தரை வண்டு உள்ளிட்ட நன்மை செய்யும் பூச்சிகள் பெருக்கம் அடைந்து காணப்படும். அவ்வாறு பயறு வகைப் பயிரில் பெருகிவரும் நன்மை செய்யும் பூச்சிகள் நெல் வயலில் உள்ள தீமை செய்யும் பூச்சிகளான புகையான், தத்துப்பூச்சி, இலைப்பேன், இலைசுருட்டுபுழு உள்ளிட்ட தீமை செய்யும் பூச்சிகளை அழித்து நெற்பயிருக்கும், விவசாயிக்கும் நன்மை செய்கிறது. இரண்டாவதாக பயறு வகை பயிரில் வேர் முடிச்சுகள் இருப்பதாலும், வேர்பகுதி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை பெருக்கி மண்ணை வளப்படுத்துகிறது. மூன்றாவதாக விவசாயிகளுக்கு வரப்பில் பயிர் செய்த உளுந்தில் இருந்து அதிகப்படியாக ஒரு பயறு மகசூல் கிடைக்கிறது. எனவே வயலில் நெல்லு வரப்பில் உளுந்து என்ற கோஷத்தோடு செங்கோட்டை வட்டார பகுதிகளில் மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் மத்தியில் நடத்தும் அனைத்து விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களிலும் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். அதோடு நின்றுவிடாமல் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று விவசாயிகளோடு சேர்ந்து நெல் வயல் வரப்புகளில் உளுந்தை ஊன்றியதோடு, விவசாயிகளையும் ஊன்ற ஊக்கப்படுத்தி வருகிறோம். தற்போது பலருடைய வயல்களின் வரப்புகளில் அந்த உளுந்து பயிர் நன்கு வளர்ந்து பூத்து, காய்க்கத் தொடங்கியுள்ளது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் இந்த ஆண்டு செங்கோட்டையில் ஆய்குடி அருகேயுள்ள கிளாங்காடு பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நெல் வயல்களின் வரப்பில் உளுந்து சாகுபடி செய்து அதன் மூலம் கூடுதலாக உளுந்து மகசூலும், நெல்லில் பூச்சித் தொந்தரவுகள் கட்டுப்படுத்தப்பட்டு நெல்லில் நல்ல மகசூலும் பெற்று கூடுதல் வருமானம் ஈட்டி வருகின்றனர். ‘வயலில் நெல்லு வரப்பில் உளுந்து’ என்ற பயிர் பாதுகாப்பு நுட்ப முறையில் தமிழகத்திலுள்ள பல லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் அந்த வயல்களின் வரப்புகளில் உளுந்து பயிர் செய்வார்களேயானால், அதன் மூலம் தமிழகத்தில் உளுந்து உற்பத்தி அதிகரிப்பதோடு, விவசாய செலவுகள் குறைந்து, மண்ணின் வளம் அதிகரிக்கும் என்கிறார் ஷேக்முகைதீன். கிளாங்காடு கிராமத்திலுள்ள வயல்காட்டு காலனியில் தனது நெல் வயல்களின் வரப்பில் உளுந்து பயிர் செய்ததன் மூலம் கிடைத்த பலன்கள் குறித்து விவசாயி சாமிராஜிடம் கேட்டோம். ‘ஆய்குடி அருகே, கிளாங்காடு கிராமத்திலுள்ள வயல்காட்டு காலனியில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் கடந்த ஆண்டு சௌபாக்யா ரக நெல் பயிர் செய்தேன். அப்போது அந்த வயல் வரப்புகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் அறிவுறுத்தல்படி உளுந்து விதைகளை ஊன்றினேன். அவை நன்கு வளர்ந்து காய்கள் காய்த்தது. பின்னர் அறுவடை செய்தபோது 7 கிலோ வரை உளுந்து கிடைத்தது. மேலும் இதன் மூலம் நெல் பயிரை தாக்கும் பூச்சிகள் தொந்தரவு குறைந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு செங்கோட்டை வட்டார வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் எனக்கு மானிய விலையில் உளுந்து விதைகள் கிடைத்தது. அதோடு அந்த அதிகாரிகளே தென்காசி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் மற்றும் உதவி இயக்குநர் கனகாம்மாள் ஆகியோரை நேரில் அழைத்து வந்து உளுந்து விதைகளை வழங்கி, எங்களோடு உடனிருந்து நெல் வயல்களின் வரப்புகளில் உளுந்து விதை ஊன்றினார்கள். தற்போது அந்த உளுந்து பயிர்களில் பூக்கள் பூத்து, காய்கள் காய்க்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் எனக்கு கூடுதலாக உளுந்து மகசூலும், கூடுதல் வருமானமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்கிறார் சாமிராஜ். ‘வயலில் நெல்லு வரப்பில் உளுந்து’ என்ற பயிர் சாகுபடி முறையின் மூலம் கிடைத்த பலன்கள் குறித்து செங்கோட்டை வட்டாரம் புளியரை பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நெல்லை மண்டல தலைவரான செல்லத்துரையிடம் கேட்டோம். ‘கடந்த ஆண்டு புளியரையில் உள்ள எனது 8 ஏக்கர் நிலத்தில் என்எல்ஆர் என்ற மத்திய கால ரக நெல்லை பயிர் செய்தேன். மொத்தம் 125 நாள் பயிரான இந்த நெல்லின் விதையை நாற்றங்காலில் விதைத்து 25 நாட்கள் கழித்து நாற்றுகளை எடுத்து வயலின் நட்டேன். அதன் பிறகு 100 நாட்களில் நெல் அறுவடை செய்யலாம். இந்ந நிலையில் அப்போது செங்கோட்டை வட்டார வேளாண்மை துறை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், எனது வயலில் நெல் நாற்றுகள் நடும்போது, வேளாண் துறையினர் எனக்கு மானிய விலையில் வழங்கிய வம்பன் 8 ரக உளுந்து விதைகளை எனது நெல் வயல்களின் வரப்புகளில் 1 அடிக்கு 1 விதை வீதம் ஊன்றினேன். இதற்கு அதிகபட்சம் 1/2 கிலோ அளவிலான உளுந்து விதைகள் போதுமானதாக இருந்தது. இந்த உளுந்து விதை நட்டு 60 முதல் 80 நாட்களில் அறுவடை செய்யலாம். கிட்டத்தட்ட நெல் அறுவடைக்கு 20 நாட்களுக்கு முன்னரே உளுந்து பயிரை அறுவடை செய்தேன். அதிலிருந்து எனக்கு மொத்தம் 30 கிலோ வரை உளுந்து மகசூல் கிடைத்தது. ஒரு கிலோ உளுந்துக்கு ரூ.70 வீதம் 30 கிலோவுக்கு ரூ.2,100 வரை கூடுதலாக எனக்கு வருமானம் கிடைத்தது. இந்த பயிர் சாகுபடி முறை மூலம் எனக்கு கூடுதலாக உளுந்து மகசூல் கிடைத்ததோடு, நெல்லிலும் நல்ல மகசூல் கிடைத்தது. இதனால் விவசாய செலவுகள் சற்று குறைந்ததோடு, நல்ல வருமானம் கிடைத்தது. மேலும் இதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகள் எண்ணிக்கை வயலில் அதிகரித்தது. அப்பூச்சிகள் நெல் பயிரில் தீமை செய்யும் பூச்சிகளை கட்டுப்படுத்தியது. இதனால் பூச்சி மருந்துகளை பயன்படுத்த வேண்டிய தேவை குறைந்தது. எனவே கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் நெல் வயல்களின் வரப்பில் உளுந்து பயிர் செய்துள்ளேன். அதில் தற்போது காய்கள் நன்கு காய்த்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என்கிறார் செல்லத்துரை. தொடர்புக்கு: வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் -70105 71084. சாமிராஜ்- 96889 28266. செல்லத்துரை- 94861 81118. தொகுப்பு: க.கதிரவன் படங்கள்: முருகன்…