ஆண்டிபட்டி, ஆக.7: வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆண்டிபட்டியிலிருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து பல்வேறு நிறுவனங்களில் இருந்து நிவாரண பொருட்களை சேகரித்தனர். மேலும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இந்த நிவாரண பொருட்களை நேற்று, ஆண்டிபட்டி வைகை அணை சாலை பிரிவு அருகே சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் வாகனத்தின் மூலம் அனுப்பி வைத்தார். அதில் உணவுப் பொருட்கள், போர்வைகள், உடைகள், பாத்திரங்கள் என பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.