கூடலூர், ஆக.5: கேரள மாநிலம் 14 மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டக்கை மற்றும் ஆகிய இடங்களில் கடந்த 30ம் தேதி அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகளில் சிக்கி இறந்தவர்களின் உடல்கள் நூற்றுக்கணக்கில் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் 300க்கும் அதிகமானவர்களின் உடல்கள் மண்ணில் புதைந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. அனைவரும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலு
த்தும் நிகழ்ச்சி கூடலூரில் நேற்று நடைபெற்றது. முன்னதாக கூடலூர் நகராட்சி அருகில் துவங்கி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. பழைய பேருந்து நிலையம், சுங்கம் ரவுண்டனா, தாலுகா அலுவலகம் வழியாக காந்தி திடலில் மவுன ஊர்வலம் முடிவடைந்தது. பின் அங்கு மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சிகள், கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்கம், அனைத்து ஓட்டுநர் சங்கங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்களின் முக்கிய பிரமுகர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.