கோவை, ஆக. 7: வயநாடு சம்பவத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி, ஏஐடியூசி சார்பில் பிரதமருக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் முன்பு நேற்று நடந்தது. மாவட்ட கவுன்சில் பொது செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். தொடர்ந்து 10க்கும் மேற்பட்டோர் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்தனர். இது குறித்து ஏஐடியூசி தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில்,’’கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் மிக கோரமான சம்பவம் நடைபெற்றது. ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர், உடமைகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளனர். எனவே, ஒன்றிய அரசு இந்த சம்பவத்தை தேசிய பேரிடர் நிகழ்வாக அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றனர். இதில், பொறியியல் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வம், துணைப் பொதுச் செயலாளர் கோட்டை நாராயணன், கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் சக்திவேல், அமைப்பு சாராத் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திரன், வேலுசாமி, பூபதி, ஜீவா, தங்கராஜ், போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.