புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹ்மதி, உடல்நலக் குறைவால் டெல்லியில் காலமானார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹ்மதி (90), வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஏ.எம்.அஹ்மதி காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நீதித்துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 1954ல் மும்பையில் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய ஏ.எம்.அஹ்மதி, படிப்படியாக வளர்ந்து 1994 முதல் 1997 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். நீண்ட காலம் பணியாற்றிய தலைமை நீதிபதிகளில் ஒருவரான இவர், பல்வேறு கமிஷன்களுக்கும் தலைமை வகித்து வந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில், 232 தீர்ப்புகளை அளித்துள்ளார்; 811 பெஞ்ச்களில் விசாரணை நடத்தியுள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருந்தார். சர்ச்சைக்குரிய பிரச்னைகள் தொடர்பான வழக்குகளில் கூட அவரது தீர்ப்புகள் இன்றும் முன்மாதிரியாக உள்ளன….