பாலக்காடு, ஜூன் 6: வன விலங்குகளால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பது குறித்து எம்எல்ஏ பிரபாகரன் தலைமையில் பாலக்காடு வனத்துறை மண்டல அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வன அதிகாரி ஜோசப் தாமஸ் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. காட்டில் இருந்து வெளியேறும் வன விலங்குகளால் விளைச்சல் நிலங்கள் சேதம், பயிர்நாசம் மற்றும் மனித உயிர் பாதுகாப்பு குறித்து பேசப்பட்டது. காட்டிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளால் மனித உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும், அவற்றை விரட்டும் பணியில் வனத்துறை காவலர்கள் ரோந்தில் ஈடுபடவேண்டும். இவைகளால் தோட்டப்பயிர்கள் சேதம் ஏற்படுவது குறித்து ஆய்வு செய்து உடனடியாக நஷ்டஈடு தொகை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
மேலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டால் உடனடியாக விரைந்து சென்றவாறு நடவடிக்கை கையாளவேண்டும். மலம்புழா பிளாக் பஞ்சாயத்திற்கு உட்பட்ட 8 கிராமப் பஞ்சாயத்து பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வன விலங்குகள் ஊருக்குள் புகாமலிருக்க அகழி, பென்ஷிங் ஆகியவை ஏற்படுத்த வேண்டும். வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதிகள் காட்டிற்குள் ஏற்படுத்த வேண்டும். தேனீக்கள் வளர்ப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வாளையார் சரக அதிகாரி முகமதலி ஜிணா, ஒலவக்கோடு சரக அதிகாரி இம்ரோஸ், மலம்புழா, மருதுரோடு முண்டூர், புதுச்சேரி, அகத்தேத்தரை, எலப்புள்ளி ஆகிய கிராமப்பஞ்சாயத்து தலைவர்கள் உட்பட வனத்துறை ஊழியர்களும் பங்கேற்றனர்.