காஞ்சிபுரம், ஆக. 31: காஞ்சிபுரம் மாவட்டத்தில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் பதவிக்கு, விரும்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்விமோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வருடத்திற்கு ஒரு முறை வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989 மற்றும் விதிகள் 1995ன்படி மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். கடந்த 31.7.2024 வரை மேற்படி குழு உறுப்பினர்களின் மூன்றாண்டு பதவிகாலம் முடிவடைந்தநிலையில் புதியதாக குழு உறுப்பினர்களை தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ 6.9.2024க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கீழ்காணும் உறுப்பினர்களை கொண்டு அமைக்கப்படும். இதில், குழு தலைவராக மாவட்ட கலெக்டர், செயல் உறுப்பினராக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உறுப்பினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாநில அரசு அலுவலர்கள், (தொகுதி அ நிலை அதிகாரிகள்/அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகள்) உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த அரசு அலுவலராக பணிபுரியாத நபர்கள் உறுப்பினர்கள், ஆதிதிராவிடர் இனத்தைச் சாராத நபர்கள் பொதுத்தொண்டில் ஆர்வம் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.