பொன்னேரி, நவ.6: ‘‘தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் பழவேற்காடு ஏரியை நிலைப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்’’ என தமிழக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பழவேற்காடு பகுதியில் உள்ள பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆண்டுதோறும் தூர்ந்துவிடுவதால், மீனவர்கள் கடலுக்குள் தங்கள் படகுகள் மூலம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, முகத்துவார பகுதியை தூர்வாரி சீரமைக்க வேண்டும், என பழவேற்காடு மீனவ மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதை ஏற்று, ரூ.26.85 கோடியில் பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி, அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி மேற்கொள்வதற்கு நிர்வாக ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. இதற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி கடந்த 2022ம் ஆண்டு பெறப்பட்டது. இந்த பணிகள் மேற்கொள்ள, ஒன்றிய அரசின் நிபந்தனைகளின்படி தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதியையும் பெற வேண்டும். அதன்படி, தேசிய வனவிலங்கு வாரியத்தின் அனுமதி பெறும் பொருட்டு மாநில வனவிலங்கு வாரியத்துக்கு கருத்துரு, மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை மூலம் சமர்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில வனவிலங்கு வாரிய கூட்டத்தில் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி மேற்கொள்ள மாநில வனவிலங்கு வாரியத்தால், தேசிய வனவிலங்கு வாரியத்துக்கு அனுமதி கோரி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறப்பட்டவுடன், பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர்வாரி அலைதடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணி, தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் உடனே துவங்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.