ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 4 நாட்களுக்கு நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலகம் இணைந்து 2023-24ம் ஆண்டில் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் 0 முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுனர்கள் பங்கேற்று தேவைப்படும் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளனர். இதன்படி ஊட்டி வட்டாரத்தில் 9ம் தேதி ஊட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலும், குன்னூர் வட்டாரத்தில் 10ம் தேதி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியிலும் முகாம் நடக்கிறது. மேலும் கோத்தகிரி வட்டாரத்தில் 11ம் தேதி கோத்தகிரி அரசு பள்ளியிலும், கூடலூர் வட்டாரத்தில் 12ம் தேதி வணடிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியிலும் முகாம் நடக்கிறது. இம்முகாம்கள் அனைத்தும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலர் மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை மற்றும் யுடிஐடி வழங்கப்படஉள்ளது. மேலும் உதவி உபகரணங்களுக்கான அளவீட்டு முகாமும் நடைபெற உள்ளது.