கண்ணமங்கலம், அக்.25: சந்தவாசல் அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், சந்தவாசல் வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில் வனவர் சுப்பிரமணியன், வனக்காப்பாளர் கலையரசி, ராஜ்குமார், சந்திரன் மற்றும் பச்சையப்பன் ஆகியோர் ஆத்துவம்பாடி பீட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் சுற்றித்திரிந்தது தெரிந்தது. இதை கண்ட வனத்துறையினர் அவரை சுற்றிவளைத்து விசாரித்தனர். அதில், ஜமுனாமரத்தூர் தாலுகா, கீழ்குப்பனாவூர் கிராமத்தை சேர்ந்த தாமோதரன்(35) என்பதும், அவரிடம் 2 நாட்டுத்துப்பாக்கிகள் உரிமம் இல்லாமல் வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து, வனத்துறையினர் அவரிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவற்றை வேட்டையாட பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்கு பதிந்து தாமோதரனை கைது செய்தனர். பின்னர், அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.
வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபர் கைது 2 நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் சந்தவாசல் அருகே
116
previous post