கிருஷ்ணகிரி, ஆக.22: மகாராஜகடை வனப்பகுதியில், 7 யானைகள் முகாமிட்டுள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடை வனப்பகுதியில், ஆந்திரா மாநில எல்லையில் உள்ள வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் ஏற்கனவே 5 யானைகள் முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் அடிக்கடி வனத்தை சுற்றியுள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த யானைகள் விளைநிலங்களுக்குள் நுழைவதை தடுக்க, வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன், கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் தமிழக எல்லை வனப்பகுதியான, கொங்கனப்பள்ளி வனப்பகுதிக்கு வந்தது. இந்த யானைகளை வனத்துறையினர், வேறு வனப்பகுதிக்கு விரட்ட முயன்ற போது, அவை மகாராஜகடை வனப்பகுதிக்கு வந்துவிட்டது. ஏற்கனவே 5 யானைகள் மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டுள்ள நிலையில், மேலும் 2 யானைகளும் முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களும், விவசாயிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதனிடையே, வனத்தையொட்டி உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.