ஒடுகத்தூர், அக்.7: ஒடுகத்தூர் அருகே மலை பகுதியில் காட்டுக்கு நடுவே பதுக்கி வைத்திருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறலை வேப்பங்குப்பம் போலீசார் கைப்பற்றி அழித்தனர். அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட அல்லேரி, பீஞ்சமந்தை, ஜார்தான்கொல்லை, பலாம்பட்டு போன்ற பல்வேறு மலை ஊராட்சிகளில் 100க்கும்மேற்பட்டமலை குக்கிராமங்கள் உள்ளது. இந்த மலைப்பகுதிகளில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கஞ்சா செடிகள் வளர்ப்பது போன்ற சமூக விரோத செயல்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே, கள்ளச்சாராயம் குடித்து விட்டு ஏராளமானோர் உயிரிழந்தநிலையில் அதனை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் எஸ்பி தலைமையில் மலைபகுதிகளில் சாராய தடுப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது நடந்து வருகிறது. ஆனாலும், கள்ளச்சாராயம் காய்ச்சுவது முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. இந்நிலையில், எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் நேற்று ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட தேக்குமரத்தூர் மலைபகுதியில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, காட்டுக்கு நடுவே செல்லும் கானாற்று ஓடை பகுதியில் சோதனை நடத்திய போது, அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக மண்ணால் ஆனா அடுப்புகளுடன் புதிதாக 2 பேரல்கள் அமைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அந்த இரண்டு பேரல்களை திறந்து பார்த்த போது அதில் கள்ளச்சாராயம் காய்ச்சிவதற்காக சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல்கள் இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.
அதேபோல், மண் பானையில் வைத்திருந்த 60 லிட்டர் கள்ளச் சாராயத்தையும் அழித்தனர். மேலும், அங்கிருந்த பிளாஸ்டிக் பேரல்கள், அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தாத வகையில் தீயிட்டு அழித்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிந்து செங்காடு கிராமத்தை சேர்ந்த தமிழ், பழனி ஆகிய இருவரையும் வலை வீசி தேடிவருகின்றனர்.