ஊட்டி, ஆக. 22: குன்னூர் காட்டேரி பூங்காவில் 2வது சீசனுக்காக முதற்கட்டமாக அலங்கார நாற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுபாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ேதயிலை பூங்கா, மரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்கா ஆகியவை உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவது வாடிக்கை.
நீலகிரியில் கோடை சீசன் நிறைவடைந்த நிலையில், அனைத்து பூங்காக்களும் செப்டம்பர், அக்டோபர், நவம்பரில் நடைபெறும் 2வது சீசனுக்காக தயராகி வருகிறது. குன்னூர் சிம்ஸ் பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா போன்றவற்றில் 2வது சீசனுக்காக மலர் நடவு பணிகள் கடந்த மாதம் துவங்கியது.குன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் மற்றும் இயற்கை எழில் சூழ்ந்த வனங்களை ஒட்டி அமைந்துள்ள இப்பூங்காவிற்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
இப்பூங்காவில் மலர் நாற்று நடவு பணிகள் துவங்கியுள்ளன. முதற்கட்டமாக ஐரிஸ் குளோரபைட், டேபிள் ரோஸ் உட்பட பல்வேறு அலங்கார நரற்றுகள் நடவு செய்யும் பணி துவங்கியுள்ளது. இவை பாத்திகளில் பல்வேறு வடிவங்களில் வடிமைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மலர் செடிகள் என 2 லட்சம் மலர் நாற்றுக்கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்படுகிறது. இதில், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாக்ஸ், ஜினியா, பெகோனியா, லூபின், டெல்பினியம் போன்ற 20க்கும் மேற்பட்ட மலர் வகை செடி ரகங்கள் நாற்றுக்கள் வரவழைத்து, நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.