கலசப்பாக்கம், ஜூன் 16: பர்வத மலை அடிவாரத்தில் சோதனை செய்த வனத்துறையினரிடம் போதை ஆசாமிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ள பர்வத மலை கோயிலில் வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது.
இந்நிலையில், மலை மீதுள்ள கோயிலுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மலை அடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை செய்து, பக்தர்களை மலை மீது ஏற அனுமதித்து வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் கொண்டு செல்லும்போது ரூ.10 ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைக்கின்றனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு கீழே வரும்போது பாட்டிலை காண்பித்ததும் ரூ.10 திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல், நேற்று மலை அடிவாரத்தில் சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், குடிநீர் பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என கூறியதால், போதை இருந்த ஆசாமிகள் அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.