வந்தவாசி, செப்.25: வந்தவாசி அருகே 10ம் வகுப்பு மாணவி துப்பட்டாவால் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். தலைமறைவாக உள்ள வாலிபருக்கு இந்த கொலையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரி. இவரது மகள் ரேணுகா(14). இவர் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த ரேணுகா அருகே உள்ள தாத்தா வீட்டிற்கு செல்வதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால், ரேணுகா மீண்டும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரது தந்தை மாரி வந்தவாசி தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை அவர்களது வீட்டின் அருகே உள்ள 5 வீடு தெருவின் பின்பகுதியில் முட்புதரில் மாணவி ரேணுகா துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். யாரோ அவரை கழுத்தை இறுக்கி கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.
ரேணுகா சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், டிஎஸ்பி கார்த்திக், இன்ஸ்பெக்டர் விசுவநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ராமு, தட்சணாமூர்த்தி, பாபு மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், நேற்று முன்தினம் மாணவி ரேணுகாவிடம் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் தலைமறைவாக உள்ள நிலையில் இந்த கொலையில் தொடர்புள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மாணவி கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.