வத்தலக்குண்டு, ஆக. 13: வத்தலக்குண்டு பஸ் நிலையத்திற்கு தினசரி 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளும் இங்கு வருகிறார்கள். இந்நிலையில், பகலிலேயே போதை ஆசாமிகள் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் படுத்து உறங்குகின்றனர். இதனால் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் டிரைவர்களுக்கும் பஸ்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
எனவே, வத்தலகுண்டு பஸ் நிலையத்தில் மீண்டும் புறக்காவல் நிலையத்தை அமைத்து போதை ஆசாமிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். இங்கு புறக்காவல் நிலையம் அமைந்தால் பயணிகளுக்கும் பாதுகாப்பான உணர்வு ஏற்படும் என்றும், பஸ் நிலைய பகுதியில் குற்றங்கள், சமூக விரோத நடவடிக்கைகளை தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.