வத்தலக்குண்டு, மே 24: வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில், வைகாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களாக நடைபெற்று வந்தது.திருவிழாவில் முக்கிய நிகழ்வாக மாவிளக்கு, பால்குடம், தீச்சட்டி எடுத்து ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பரம்பரை பட்டறைக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக நேற்று, பூப்பல்லக்கில் அம்மன் பவனி வந்தார். இதற்காக 350 கிலோ மல்லிகைப்பூ, கனகாம்பரம் உள்பட பல வகையான பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில், வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, வத்தலக்குண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.