வத்தலக்குண்டு, ஜூன் 30: வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு பயணிகளுக்கு இடையூறாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலைய முன்பு இருந்த கொடி மரங்கள் மற்றும் பீடங்களை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
அதன்பிறகு இடித்த கட்டிட இடிபாடுகள் இதுவரை அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. பஸ் நிலையம் முன்புறம் நின்று ஏராளமான பயணிகள் பஸ்களில் ஏறி பயணிப்பது வழக்கம். ஆனால் தற்போது கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாமல் இருப்பதால் பயணிகள் நிற்க இடமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக கட்டிட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.