சென்னை: சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகிறது. இதில் பச்சை வழித்தடத்தில் எழும்பூர் ரயில் நிலையமும், நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை ரயில் நிலையமும் பேருந்துகள், புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆகிய மாற்று போக்குவரத்து சேவைகளுக்கு இணைப்பாக இருப்பதால் அதிகளவில் பயணிகளை கையாள்கிறது. இதையடுத்து, இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் நுழைவாயில் வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் எழும்பூர் மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவாயில் திறக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவாயிலை, மெட்ரோ ரயில் நிறுவன தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நுழைவாயில் நேற்று முன்தினம் முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.