கீழ்வேளூர், செப்.8: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஒன்று சேர்ந்து தங்களது பெற்றோர்கள் வழங்கும் சிறு தொகைகளை ஒன்று சேர்த்து அந்தப் பணத்தில் கேக் வாங்கி வந்தனர். இந்த தகவலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரத்திடம் தெரிவித்து பள்ளியில் ஆசிரியர் தினம் கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டனர். இதையடுத்து பள்ளியில் மாணவர்கள் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை வைத்து ஆசிரியர் தின விழா கொண்டாடினர்.
அப்போது மாணவர்கள் வாங்கி வந்த கேக்கை தலைமை ஆசிரியரை வெட்டச் சொல்லி அந்த கேக்கை தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் திட்டத்தில் கற்றுக் கொடுக்கப்பட்ட கைவினைப் பொருட்களை தாமே தயாரித்து ஆசிரியர்களுக்கு நினைவு பரிசாக வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த கொண்டாட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், கணித பட்டதாரி ஆசிரியர் உதயசூரியன், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் மணிமாறன், ஆசிரியைகள் லிபியாமார்கிரேட், தனலட்சுமி, தேன்மொழி மற்றும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.